Skip to main content

பங்குச் சந்தையைப் பதம் பார்த்த கோவிட் இரண்டாவது அலை; ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

 

coronavirus issues sensex nifty investors


இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலை வேகமெடுத்ததன் விளைவாக, புதன்கிழமை (மார்ச் 24) நிப்டி மற்றும் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்தது. ஒரே நாளில் 3.20 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகள் மதிப்பு சரிந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு, புதன்கிழமை காலை முதலே கரோனா இரண்டாவது அலையால் சந்தையில் தாக்கம் இருக்கலாம் என்ற தகவல் வேகமாகப் பரவியது. இதனால் முன்னெச்சரிக்கையாக பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு கையிருப்பில் இருந்த பங்குகளை விற்கத் தொடங்கினர். அதாவது நிமிடத்திற்கு 860 கோடி ரூபாய் என்ற கணக்கில் பங்குகளை விற்றுத் தள்ளினர்.

 

சில்லரை முதலீட்டாளர்களிடையே காணப்பட்ட அச்சம், மும்பையின் தலால் தெருவில் இருக்கும் அமைப்பு ரீதியான முதலீட்டாளர்களிடமும் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 871.13 புள்ளிகள் (1.74 சதவீதம்) சரிவடைந்து, வர்த்தகத்தின் இறுதியில் 49180.31 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 265.35 புள்ளிகள் (1.79 சதவீதம்) வீழ்ச்சி அடைந்து 14549.40 புள்ளிகளில் முடிந்தது.

 

''கரோனா இரண்டாவது அலையின் பரவலின் வேகம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில் எதிர்மறை தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் கரோனா மூன்றாவது அலை கூட உருவாகலாம் என்ற பேச்சும் உள்ளது. மேலும், அமெரிக்காவில் விதிக்கப்பட்ட புதிய வரிகளும் கூட பங்குச்சந்தையின் சரிவுக்கு இன்னொரு முக்கியக் காரணம்" என்கிறார் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் வினோத் நாயர்.

 

இன்று ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தைகளில் 3.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆர்விஎன்எல் அதிகபட்சமாக 9 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஐபிஓ பங்கான அனுபம் ரசாயன், சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே 6 சதவீதம் சரிவைச் சந்தித்தது, முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, எம் அன்டு எம், யுபிஎல், எஸ்பிஐ, இண்டஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி ஆகிய பங்குகளும் கணிசமான சரிவைக் கண்டன. 

 

ஐரோப்பிய சந்தைகளும் (எப்டிஎஸ்இ) இன்று சரிவுடன் (0.16 சதவீதம்) முடிந்துள்ளன. பாரீஸ், பிராங்க்பர்ட் சந்தைகள் முறையே 0.16 சதவீதம், 0.39 சதவீதம் வரையிலும் வீழ்ச்சி கண்டன. ஆசிய கண்டத்தில் சிங்கப்பூர், தாய்லாந்து பங்குச்சந்தைகளும் சிவப்பு வர்ணத்தில்தான் முடிந்துள்ளன. அதேநேரம் புளூ சிப் பங்குகள் மற்றும் சிப்லா அதிகபட்சமாக 1.82 சதவீதமும், ஏஷியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் ஆகிய பங்குகள் ஏரளவு ஏற்றம் கண்டன. 

 

 

சார்ந்த செய்திகள்