மனிதர்கள் மூலம் பரவும் கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் பரவிய நிலையில் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இதன் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது இந்த கரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல உலகநாடுகளில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி சீனாவிலிருந்து இந்தியா வந்த இரு இந்தியர்களுக்கு கடமையான சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சீனாவிலிருந்து கேரளாவுக்கு திரும்பிய சுமார் 80 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.