
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, ஊரடங்கை இறுதி வாய்ப்பாகத்தான் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்த நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த டெல்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்கள், அந்த இறுதி ஆயுதத்தையும் கையிலெடுத்துள்ளன. அம்மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சமீபத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன், இந்தியாவில் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது என்றும், அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு அறிவுறுத்தியது.
இந்தநிலையில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், மூன்றாவது அலையைத் தடுக்க முடியும். நாட்டின் அனைத்து மாநிலங்களும் தீவிர நடவடிக்கை எடுத்தால், கரோனா மூன்றாவது அலையைத் தடுக்கலாம்" எனக் கூறியுள்ளார்.