கரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு புதுச்சேரியில் 9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த ஜூலை 16- ஆம் தேதி முதல் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என கடந்த ஜூலை முதல் வாரத்திலேயே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவின்படி, பள்ளிகள் நடத்துவதற்காக அனைத்து பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டன.
ஆனால் கரோனா நோய்த்தொற்று முழுமையாகக் குறையவில்லை எனக் குறிப்பிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைத்தார். அப்போது, "ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்குப் பிறகு ஆளுநர், முதலமைச்சருடன் கலந்தாலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் 9, 10, 11, 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. அதுபோல் கல்லூரிகள், பாலிடெக்னிக்களில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11,12- ஆம் வகுப்புகள் நடைபெறும். மேலும், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி கல்விக் கூடங்கள் இயங்கும்" என்றார்.