ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக புழுதிப்புயல் வீசிவரும் நிலையில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்தப் புயலின் தாக்கம் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லி ஷேக் ஷராய் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பற்றி எரிந்தது. புழுதிப்புயல் அதிகரித்திருந்த நிலையில், ஆம்புலன்ஸில் பற்றிய தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸின் பின்புறம் படுத்திருந்த ராகுல் மற்றும் குட்டு ஆகிய இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆம்புலன்ஸின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் 90% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அருகில் இருந்த இரண்டு ஆம்புலன்ஸ்களிலும் தீ பரவியிருந்தாலும், அதில் இருந்தவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர்.
விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸில் இருந்த கொசுமருந்து இயந்திரம் தீப்பற்றி எரிந்ததால், தீவிபத்து ஏற்பட்டது. புழுதிப்புயலின் காரணமாக தீ பரவியது என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.