நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்தது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதே போன்று டீஸ்டா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிமில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 10 சேதம் அடைந்துள்ளது. அதோடு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. மேலும் பீகாரில் 11 நாட்களில் தொடர்ச்சியாக 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.