![continue the battle against the BJP says delhi atishi](http://image.nakkheeran.in/cdn/farfuture/hCRX3IHI3ZXnhza63hai3zlODUvbdilMYSM4QH_aWOs/1739009536/sites/default/files/inline-images/58_54.jpg)
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டது. இதனால் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என்று டெல்லி தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது. மூன்று கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.
இந்நிலையில் டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(8.2.2025) காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே பாஜகவின் கை ஓங்கியிருந்த நிலையில் 3 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியினர் ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறாதது அக்கட்சியின் தேசியத் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட மனிஷ் சிசோடியவும் தோல்வியை தழுவியுள்ளார். இந்த சூழலில்தான் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும் டெல்லி முதல்வருமான அதிஷியை விட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி முன்னிலை வகித்து வந்தார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி த்ரில் வெற்றிபெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, “என் மீது நம்பிக்கை வைத்ததற்காக கல்காஜி தொகுதி மக்களுக்கு நன்றி. 'பாகுபலுக்கு' எதிராகப் பணியாற்றிய எனது குழுவை நான் வாழ்த்துகிறேன். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நான் வெற்றி பெற்றுவிட்டேன், ஆனால் இது கொண்டாட வேண்டிய நேரம் அல்ல; பாஜகவுக்கு எதிரான 'போரை'த் தொடர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.