ஊடக ஆய்வுகள் மையம் வெளியிட்டுள்ள மக்களவை தேர்தல் செலவீனங்கள் குறித்த அறிக்கையில், இந்த மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் சேர்த்து 60,000 கோடி ரூபாய் செலவு செய்த்துள்ளதாக அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக சார்பில் 28,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி. மற்றும் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, "ஊடக ஆய்வுகள் மையத்தின் தரவுகளின் படி நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமாக அனைத்து கட்சிகளும் ரூ.60,000 கோடி செலவு செய்துள்ளன. இதில் ரூ.28,000 கோடியை பாஜக மட்டும் தேர்தலில் செலவு செய்துள்ளது. இது மொத்த செலவில் 45 சதவீதம் ஆகும்.
இந்தத் தேர்தலில் பாஜக செலவிட்ட தொகையானது நாட்டின் கல்வி பட்ஜெட்டின் மூன்றில் ஒரு பங்காகும். சுகாதாரப் பட்ஜெட்டில் 43% ஆகும். பாதுகாப்பு பட்ஜெட்டில் 10% ஆகும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான மொத்த பட்ஜெட்டில் 45% ஆகும்.
அதுமட்டுமல்ல கங்கை நதியை தூய்மைப்படுத்த ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகம். இந்தத் தேர்தல் செலவுத்தொகை பாஜகவுக்கு எப்படி வந்தது?" என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தற்போது மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.