/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fdfdfdfd_0.jpg)
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தற்கொலை செய்துகொள்வது பெங்களூருவில் தொடர்கதையாகி வருகிறது.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண் ஒருவர் நேற்று இரவு மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கடந்த 18 ஆம் தேதி பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் வசிக்கும் 60 வயதான அந்தப் பெண் மற்றும் அவரது மருமகள், பேரன் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினமே இவர்கள் மூவரும் பெங்களூரு கே.சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒருவார காலமாக இவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையின் கழிவறையில் இன்று காலை தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் 60 வயதான அந்தப் பெண்.
நேற்றிரவு 2.30 மணியளவில் தனது மருமகளிடம் கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற அவர் நீண்ட திரும்ப வராததால், அவரது மருமகள் கழிவறைக்குச் சென்று தேடிப் பார்த்துள்ளார். கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காததால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்துப் பார்த்த போது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள போலீஸார், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில், கடந்த சில தினங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூவர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், "கரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் பயந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், அரசாங்கம் உங்களைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று பெங்களூரு நகரக் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)