ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு இரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த ரயில் விபத்தில் 288 பேர் இறந்துள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து ரயில் விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று ஜம்முவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ரயில்வேயில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருந்த போதிலும், ஏதாவது மனித தவறு ஏற்படலாம். எதிர்வினை எப்படி இருந்தது என்பதுதான் முக்கியம். சில நிமிடங்களில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிரதமர் மோடியும் ஒடிஷாவுக்கு சென்றார். மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் 36 மணி நேரம் அங்கேயே முகாமிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவ அரசு தன்னால் இயன்றவரை முயன்றது. இதுபோன்ற விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. குறை சொல்பவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். ரயில் விபத்து விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன’’ என்றார்.