அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றிபெற்றது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்க இருக்கிறார். சாதாரண நகைச்சுவை நடிகராக தனது வாழ்வைத் துவங்கிய அவர் பஞ்சாப் முதல்வர் எனும் உயரிய பொறுப்பை அடைந்துள்ளார். பகவந்த் மான் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் சைட்டோஜ் என்ற கிராமத்தில் பிறந்தார். அரசியல்வாதி என்பதை விட நகைச்சுவை நடிகர் என்ற விதத்திலேயே மக்களுக்குப் பரிச்சயமானவர். கல்லூரி காலங்களில் தன்னை stand-up காமெடியன் என உயர்த்திக் கொண்ட பகவந்த் மான் அரசியல் நையாண்டியாய் நகைச்சுவைகளைச் செய்து வந்தார். குறிப்பாக அவரது கல்லூரி காலங்களில் பஞ்சாபில் நிலவும் தேசிய அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக மாற்றி மக்கள் முன் நடித்துக்காட்டி கைதட்டல்கள் வாங்கி வந்தார். இதனால் அவருக்குத் திரைப்பட வாய்ப்புகளும் கிட்டியது.
நகைச்சுவை நடிகராக வலம்வந்த பகவந்த் மானின் சிந்தனைகள் காலப்போக்கில் அரசியல் பக்கம் திரும்பியது. கடந்த 2011ல் மன்பிரீத் சிங் பாதல் தலைமையில் 'பஞ்சாப் மக்கள் கட்சி' எனும் அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரசியலில் காலெடுத்து வைத்ததால் நடிகர் என்ற பட்டத்தை முழுமையாகத் துறந்து முழுநேர அரசியல்வாதியாக உருவெடுத்தார். 2012ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு கிடைத்தது என்னவோ தோல்வி தான். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 2014 சொந்த தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வென்றார். இதனால் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தற்பொழுது துரி சட்டமன்றத் தொகுதியில் வென்றுள்ளார். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பஞ்சாப் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் பகவந்த் மான்.