நாடு முழுவதும் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களைத் தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.
நிலக்கரி சுரங்கத்தில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 41 சுரங்கங்களைத் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காணொளிக்காட்சி மூலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்தச் சவாலான நேரத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வை நடத்துவது, அதில் நீங்கள் அனைவரும் பங்கேற்பது என்பது மிகப்பெரிய விஷயம். இந்தக் கரோனா நெருக்கடியை இந்தியா ஒரு நல்வாய்ப்பாக மாற்றும். இந்த நெருக்கடியான சூழல், இந்தியாவுக்கு தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுத்துள்ளது.
எரிசக்தி துறையில் இந்தியா தற்சார்பு பெற இன்று ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக, நாட்டின் நிலக்கரித் துறை ஒரு வலையில் சிக்கியிருந்தது. போட்டிகள் இல்லாமல், வெளிப்படைத் தன்மையற்று சிக்கலான நிலையில் இருந்தது. 2014 க்குப் பிறகு, இந்த நிலைமையை மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் நிலக்கரித் துறை வலுப்பெற்றுள்ளது. 2030 க்குள் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிபொருளாக்க இலக்கு வைத்துள்ளோம்.
இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் சுமார் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றுவரும் நேரத்தில் இந்த ஏலம் இன்று நடைபெறுகிறது. நுகர்வு மற்றும் தேவை கருணாவுக்கு முந்தைய காலத்தில் இருந்த இயலாது அளவுக்கு நெருங்கி வருகிறது. இத்தகைய சூழ்நிலை, ஒரு புதிய தொடக்கத்திற்குச் சிறந்த நேரமாக இருக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.