அரசியல்வாதிகளையும், பணக்காரர்களையும் சுற்றி வளைத்து விசாரித்து வந்த அமலாக்கத்துறையின் பிடியில் இப்போது சிம்பன்சிகளும் தேவாங்குகளும் சிக்கியிருக்கின்றன.
ரூ.75 லட்சம் மதிப்புள்ள மூன்று சிம்பன்சிகளையும், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 தேவாங்குகளையும் அமலாக்கத்துறை தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு சுப்ரதீப் குஹா என்பவர் மீது மேற்கு வங்க வனவிலங்கு பாதுகாப்பு துறையும், 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி மேற்கு வங்க போலீஸும் வனவிலங்கு கடத்தல் சட்டத்தின் கீழ் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.
விசாரணையில் இந்த விலங்குகள் ஆப்பிரிக்காவின் உகாண்டா, ருவாண்டா, தான்ஸானியா ஆகிய நாடுகளில் இருந்து வங்கேதசம் வழியாக கொல்கத்தாவுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இங்கிருந்து ஹைதராபாத்திற்கு கடத்தப்படும் நிலையில் அதிகாரிகள் கண்டுபிடித்து வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து குஹா கைது செய்து செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டார். சிம்பன்சிகள் இந்தியாவில் பிறந்தன என்று போலிச் சான்றிதழ்களை அவர் தாக்கல் செய்தார்.
அவருடைய வாக்குமூலத்தில் இருந்த குளறுபடிகளைத் தொடர்ந்து சிம்பன்சிகளும், தேவாங்குகளும் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் விடப்பட்டுள்ளன. அங்கு அவை பார்வையாளர்களைக் கவர்கின்றன. வருவாயை அதிகமாக ஈட்டித் தருகின்றன. அதேசமயம் குஹா தப்பிவிட்டார். நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் அதிகாரிகள் முன் ஆஜராகவில்லையாம்.