நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது.
14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை நேற்று முன்தினம் (17-06-24) அறிவித்தார். ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி நேற்று (18-06-24) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.