தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. தமிழகத்தில் சாதிய பாகுபாடு தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக பட்டியலின ஊராட்சி தலைவர்கள் பணிகளைக் கூட செய்ய முடியாத நிலை உள்ளது. பட்டியலின தலைவர்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் பல்வேறு இன்னல்களை தினம் தினம் திமுக அரசினால் பெற்று வருகின்றனர். திமுக அரசு தங்களை சமூக நீதிக்கான முன்னோடிகள் எனச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் சமூக நீதியை அவர்கள் பின்பற்றவில்லை. அதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி பற்றிப் பேசுவதற்கான தார்மீகம் இல்லாதவர். இதற்கெல்லாம் இந்தச் சம்பவங்களே காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.