பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு வெறும் ரூ 1,86,650 கோடி தான் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை ஈடுசெய்ய 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்கத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகப் பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தன்னிறைவு இந்தியா என்ற திட்டத்தின் கீழ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரத்தில் நான்கு நாட்கள் திட்ட அம்சங்கள் குறித்து மக்களுக்கு அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.