மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. மேலும் இந்த பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக்கொண்ட பாடம் என்ன? தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை” என்றார். மேலும், தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளபோது முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு துணை நிற்காமல் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்றும் விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபில் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் நாட்டில் உள்ள பிரச்சனைகள் என்று பட்டியலிட்டு, “வேலை இல்லாத் திண்டாட்டம், கடன், வறுமை, பட்டினி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துங்கள்; முதல்வர் ஸ்டாலினை குறி வைக்காமல் நாட்டில் உள்ள பல பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.