கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களில் உள்ள வழிப்பாட்டு தளங்களுக்கு யாத்திரை செல்வது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த நான்கு இடங்களுக்கும் இடையே உள்ள சாலை வசதியை மேம்படுத்த மத்திய அரசு, சார் தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.
இந்த திட்டத்தின் கீழ், இந்த நான்கு பகுதிகளுக்குமிடையே உள்ள 899 கிலோமீட்டர் சாலையை 10 மீட்டர் வரை அகலப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏராளமான மரங்கள் வெட்டப்படும் என்றும், அதனால் இதனை நிலச்சரிவுகள் ஏற்படும் என கூறி இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலையை ஐந்து கிலோமீட்டருக்கு மேல் அகலப்படுத்தக் கூடாது என கூறியது. இதனையடுத்து தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு, எல்லையின் மறுபுறம் சீனா ஹெலிபேடுகளையும், கட்டிடங்களையும் கட்டி வருகிறது. எனவே பீரங்கி, ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் டாங்கிகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் இந்த சாலைகள் வழியாக செல்ல வேண்டியிருக்கும்" எனத் தெரிவித்தார்.
அதற்கு தொண்டு நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "இந்த அகலமான சாலைகள் எங்களுக்கு வேண்டும் என்று ராணுவம் ஒருபோதும் கேட்கவில்லை. அரசியல் அதிகாரத்தில் உள்ள ஒருவர் சார் தாம் யாத்திரைக்கு நெடுஞ்சாலைகள் வேண்டும் என்றார். இராணுவம் தயக்கத்துடன் அதை ஏற்றுக்கொண்டது" எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இதில் எங்களின் இக்கட்டான நிலையை உங்களுக்குச் சொல்ல வேண்டும். சுற்றுலாத்துறைக்காக இதைச் செய்கிறோம் என மத்திய அரசு கூறினால் கடுமையான நிபந்தனைகளை விதிக்கலாம். ஆனால் இது எல்லைகளைப் பாதுகாக்க தேவைப்பட்டால் அது மிக இக்கட்டான சூழ்நிலையாகும். இத்தை நீதிமன்றம் மிக நுணுக்கமாக கையாள வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடைபெறவுள்ளது.