மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன்பிறகு விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்கு எல்லையிலும் கலவரம் வெடித்தது.
இந்த வன்முறை சம்பவங்களால், விவசாயிகள் போராடி வரும் டெல்லியின் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைகளில் இணையதள வசதி தாற்காலிமாக முடக்கப்பட்டது. மேலும் டெல்லியில் விவசாயிகள் கூடுவதைத் தடுக்க, எல்லைகளில் கான்க்ரீட் தடுப்புகள், முள்வேலிகள் உள்ளிட்ட தடுப்புகளை டெல்லி காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த, சர்வதேச பாப் பாடகர் ரிஹானா, "நாம் ஏன் இதுபற்றி பேசுவதில்லை" என கேள்வியெழுப்பியிருந்தார். அதேபோல், இதே செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கிரெட்டா தன்பெர்க், “விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கிறோம்” என பதிவிட்டுள்ளார். இவர் சுற்றுசூழல் விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்போடு கடுமையாக மோதியவர் ஆவர். இதேபோல் மியா கலீஃபா, "என்ன மனித உரிமை மீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? டெல்லியைச் சுற்றி இணைய சேவையை ரத்து செய்துவிட்டார்கள்?!" எனத் தெரிவித்திருந்தார்.
சர்வதேச பிரபலங்களின் இந்தப் பதிவுகளால், விவசாயிகளின் போராட்டம் சர்வதேச கவனம் பெரும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பிரபலங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவில் குறைந்த அளவிலான விவசாயிகளுக்கே, வேளாண் சட்டங்கள் குறித்து மாற்றுக்கருத்து உள்ளது. போராட்டக்காரர்களின் உணர்வுகளை மதித்து, மத்திய அரசு தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கவும் தயாராகவுள்ளது. தனிப்பட்ட நலன் சார்ந்த குழுக்கள், தங்களது திட்டங்களைப் போராட்டங்களில் திணித்து, அவற்றை தடம்புரள செய்ய முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. இதுவே ஜனவரி 26 இல் காணப்பட்டது. பரபரப்பான சமூக ஊடக ஹேஷ்டேக்குகள் மற்றும் கருத்துகளைப் பிரபலங்களும், மற்றவர்களும் நாடும்போது அது துல்லியமானதாகவோ, பொறுப்பான ஒன்றாகவோ இல்லை’ எனக் கூறியுள்ளது.
மேலும், ‘இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிக்கும் முன்னர், உண்மைகளை உறுதிசெய்து கொள்ளுமாறும், விவகாரங்கள் குறித்த சரியான புரிதலைக் கொண்டிருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்’ எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.