காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையிலும் தற்பொழுது வரை நீர் திறக்கப்படவில்லை. நேற்று காவிரி மேலாண்மைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று மாலையே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி டெல்லியில் இன்று (19.09.2023) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், 'கர்நாடக அரசுக்கு தண்ணீர் இருந்தும் திறந்துவிட மனமில்லை. காவிரி விவகாரத்தை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது; எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில், காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், கர்நாடக அரசு சார்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு நாளை டெல்லி செல்ல உள்ளது. பிரதமர் மோடி, அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை இக்குழு சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் நாளை டெல்லியில் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகனும் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.