
கர்நாடகா மாநிலம் உடுப்பி டவுன் அம்பலவாடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் சேர்ந்து கழிவறையில் செல்போன் கேமரா மூலம் சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை அந்த மாணவிகள் கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை அறிந்த கல்லூரி நிர்வாகம், மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த 3 மாணவிகளை உடனடியாக கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து, மாணவிகள் எடுத்த அந்த ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியானதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த விவகாரம் அந்த மாநிலம் முழுவதும் பரவி, பூதாகரமாக வெடித்தது.
இந்த சம்பவத்துக்கு, பா.ஜ.க, இந்து அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக நேற்று உடுப்பி காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ள 3 மாணவிகள் மீது ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் உடுப்பி காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட மாணவி, ஆபாச வீடியோ எடுத்த மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.