கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குறித்து மத்திய அரசு மிக முக்கிய முடிவு ஒன்றை எடுத்தது. அதன்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரிய எதிர்ப்பை கிளப்பினாலும் பெரும்பான்மை பலம் இருந்ததன் காரணமாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை எளிதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இதையடுத்து சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்துள்ளார்.