நாட்டையே உலுக்கிய மோர்பி பால விபத்து குறித்தான முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் அக்டோபர் 30 ஆம் தேதி சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து, பாலத்தை பராமரிக்கும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் பாலத்தை நிர்வகித்த அதிகாரிகள் மீண்டும் மீண்டும் மக்களை அனுப்பியபடியே இருந்தனர். அதிகாரிகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்பட்டனர் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதன் காரணமாக நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பால விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை குஜராத் மாநில அரசு அமைத்தது. இந்த குழு தனது முதற்கட்ட விசாரணையை நிறைவு செய்து அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், “மோர்பி பாலத்தில் இருந்தது, 2 பிரதான இரும்பு கேபிள்கள். ஒவ்வொரு கேபிளிலும் பல துணை கேபிள்கள் இருந்தன.
இதில் ஒரு கேபிள் விபத்து நடந்ததற்கு முன்பே துருப்பிடித்து இருந்ததும் பல துணை கேபிள்கள் அறுந்து இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. துருப்பிடித்து இருந்த மெயின் கேபிள் அறுந்து விழுந்ததும் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் சஸ்பெண்டர்ஸ் கம்பியில் புதிய கம்பியை வெல்டிங் வைத்துள்ளனர். விபத்துக்கு இதுவும் ஒரு காரணம்” என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.