தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாட்டங்கள் முடிந்திருக்கும் நிலையில் ஆந்திராவிலும் சில இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆந்திராவில் எம்எல்ஏ ஒருவர் காணும் பொங்கல் தினத்தன்று தன்னை காண வருவோருக்கு மது பாட்டிலும் உயிருடன் கோழியும் பரிசாக அளித்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ வாசுப்பள்ளி கணேஷ் என்பவர் காணும் பொங்கல் அன்று தன்னைக் காண வரும் தொண்டர்களுக்கு முழு மது பாட்டிலையும், உயிருடன் ஒரு கோழியையும் வழங்குவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்.எல்.ஏ வாசுபள்ளி கணேஷ் குமார் மீது ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. தசரா பண்டிகையின்போது கட்சிக்காரர்களுக்கு சினிமா டிக்கெட், கோழிக்கறி, மதுபானம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். ஆந்திராவில் ஒரு நபர் அதிகபட்சமாக மூன்று பாட்டில்களை சேமிக்க மட்டுமே அனுமதி உள்ள நிலையில் 400 மதுபாட்டில்களை சேமித்து விநியோகித்த எம்எல்ஏவின் செயல் குறித்து கலால் அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.