மாணவர்கள் சங்க தேர்தலில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் தடையை மீறி அங்கு பேரணியாக சென்றதாக கூறப்படுகிறது. தடையை மீறி பேரணி சென்ற நிலையில் மாணவர் அமைப்பிற்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதில் மாணவர் தரப்பினருக்கும், காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தடையை மீறி பேரணி நடத்தியதால்தான் இந்த சம்பவம் மோதலில் முடிந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.