ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்த்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து உள்துறை அமைச்சர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய போது, “எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, எம்.பி., வீட்டில் இருந்து, இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்டுள்ளது ஆனால் ஒட்டுமொத்த இந்தியக் கூட்டணியும் இந்த ஊழலைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. காங்கிரஸின் இயல்பிலேயே ஊழல் இருப்பதால், ஜேடியு, ஆர்ஜேடி, திமுக, எஸ்பி என அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். தங்கள் ஊழலின் ரகசியங்கள் அனைத்தும் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்” என்றார்.