Skip to main content

“புறக்கணிக்கப்பட வேண்டியவர் ராகுல் தானே தவிர பத்திரிகையாளர்கள் அல்ல” - பா.ஜ.க

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

BJP says Rahul himself should be ignored, not journalists

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ, மும்பை என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. இந்தியா கூட்டணியின் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. கே.சி. வேணுகோபால், டி.ஆர். பாலு உட்பட 14 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எந்தெந்த தொகுப்பாளர்களின் நிகழ்ச்சி என்று 14 பேர் கொண்ட விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தங்களது செய்தி தொடர்பாளர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மீடியா சேனல்கள் மற்றும் எடிட்டர்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக யாரையும் அழைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்தீப் சுர்ஜேவாலா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

இந்த நிலையில், செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம், இந்தியா கூட்டணி எடுத்த முடிவால் வேதனையும், கவலை அளிப்பதாகவும் தெரிவித்தது. மேலும், இது சகிப்பின்மையைக் குறிக்கிறது மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கிறது. சில ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களை புறக்கணிக்கும் முடிவை திறம்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிக் கூட்டணியை வலியுறுத்துகிறது என்று தெரிவித்தது.

 

அதேபோல், பா.ஜ.க தரப்பில் இந்தியா கூட்டணி எடுத்த முடிவுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தது. இது குறித்து பா.ஜ.க சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா கூட்டணி சில ஊடகவியலாளர்களைப் புறக்கணிப்பது மற்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இத்தகைய முடிவுகளை எடுத்ததன் மூலம் தனது அடக்குமுறை, சர்வாதிகார மற்றும் எதிர்மறையான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய இழிவான மனநிலையை பா.ஜ.க கடுமையாக எதிர்க்கிறது” என்று தெரிவித்தது.

 

இந்த நிலையில், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்க முடியாது என்று அரசு பலமுறை கூறியுள்ளது” என்று கூறினார். அப்போது, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியினர் 14 தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தது தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி, நீதிமன்றமாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தாக்குதலுக்கு ஆளாகாத அமைப்பு இந்தியாவில் இல்லை. பத்திரிகை சுதந்திரத்தில் காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கும் நம்பிக்கை இல்லை. உண்மையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் ராகுல் காந்தி தானே தவிர பத்திரிகையாளர்கள் அல்ல” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்