ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர், ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஜார்க்கண்ட சட்டமன்றத்தில் தற்போதைய பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால் சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது. அதே போல், பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்குகிறது. இதில், பா.ஜ.க 68 தொகுதிகளிலும், ஏ.ஜெ.எஸ்.யூ 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி 1 தொகுதியிலும் போட்டியிடுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், பா.ஜ.க போட்டியிடும் 66 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனுக்கு பா.ஜ.க சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்வதற்காக ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் மாநில முதல்வராக சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். ஹேமந்த் சோரன் விடுதலையான பிறகு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் பா.ஜ.கவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.