ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையிலான அமைச்சரவையில், மாநில கல்வி அமைச்சராக மதன் திலாவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், பேரரசர் அக்பர் குறித்து பேசிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் சுகாடியா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் 28வது மாநில அளவிலான ‘பாமா ஷா சம்மன் சமரோ’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதன் திலாவர், “அக்பர் பல ஆண்டுகளாக நாட்டை கொள்ளையடித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள பாடப்புத்தகங்களில் அவரை ‘சிறந்த ஆளுமை’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள். நாங்கள் அனைத்து பாடப்புத்தகங்களில் சரிபார்த்துள்ளோம். அவரை பற்றி எந்த குறிப்பும் இல்லை. அப்படி ஒருவேளை இருந்தால், அந்த பாடப்புத்தகம் எரிக்கப்படும். அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர். அவர் ஒரு ஆக்கிரமிப்பாளர். அவரை ஆளுமைமிக்கவர் என்று அழைப்பது பெரிய முட்டாள்தனம்” என்று கூறினார். அக்பர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சருக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நிகழ்ச்சி ஒன்றிய பேசிய இவர், “நாங்கள் பள்ளியில் படிக்கும்போது, அக்பர் மிகப்பெரியவர் என்று படித்தோம். நானும் அதைத்தான் படித்திருந்தேன். ஆனால் அவர் ‘மீனா பஜார்’ என்ற இடத்தை அமைத்து அழகான பெண்களை அழைத்துச் சென்று அவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். பாலியல் வன்கொடுமை செய்பவர் எப்படி பெரிய ஆளுமையாக இருக்க முடியும். அக்பர் ஒரு சிறந்த ஆளுமையாக இருந்ததில்லை. அவர் ஒரு ஆக்கிரமிப்பாளராகவும், பாலியல் வன்கொடுமை செய்பவராகவும் தான் இருந்தார். அக்பரின் பெயரை இந்தியாவில் வைப்பதே பாவம். அக்பர் ஒரு படையெடுப்பாளர். அவருக்கும் இந்திய மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.