மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் 7-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால், அதன்பின் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்று பாஜக மூத்த தலைவரான சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.
பாஜக - சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளபோதும், அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. அதிகாரப் பகிர்வில் 50- 50 என்ற முடிவில் சிவசேனா உறுதியாக இருப்பதால் அங்கு அரசு அமைப்பது தாமதமாகி உள்ளது. முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக உள்ளதோடு, அது தொடர்பான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறது.
தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில் சுதிர் முங்கந்திவார் அளித்த பேட்டியில், "தீபாவளி பண்டிகை வந்ததால், சிவசேனாவுடன் எங்களால் பேச்சு நடத்த முடியவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சு தொடங்கும் என நம்புகிறேன். இந்த பேச்சும் குறிப்பிட்ட காலத்துக்குள் தொடங்க வேண்டும். அதாவது 7-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும்" என்றார். சிவசேனாவை பணியவைக்கவே பாஜக, குடியரசு தலைவர் ஆட்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.