மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று (23.08.2021) தேசிய பணமாக்கல் (national monetization pipeline) திட்டத்தை முறைப்படி ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் குறைவாகப் பயன்படுத்தப்படும் அரசு சொத்துகள், குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றைக் குத்தகைக்கு விடுவதும் அடங்கும்.
அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம், நெடுஞ்சாலைத்துறையிலிருந்து 1.6 லட்சம் கோடியையும், ரயில்வே துறையிலிருந்து 1.5 லட்சம் கோடியையும், மின் துறையிலிருந்து 79,000 கோடியையும் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், விமான நிலையங்களிலிருந்து 20,800 கோடியையும், துறைமுகங்களில் இருந்து 13,000 கோடியையும், தொலைத்தொடர்பு துறையிலிருந்து 35,000 கோடியையும், ஸ்டேடியங்களில் இருந்து 11,500 கோடியையும், மின்சக்தி பரிமாற்றத் துறைகளிலிருந்து 45,200 கோடியையும் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அரசு சொத்துக்களை குத்தகைக்குவிடும் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தற்பொழுது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ''நாட்டின் அனைத்து சொத்துக்களையும் பாஜக விற்றுவிட்டது. அரசுக்கு சாதகமான தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பரிசாக அளிக்கிறார் பிரதமர். 42,000 கிலோ மீட்டர் தூர மின்தடங்களை தனியாருக்கு பிரதமர் தாரைவார்க்கிறார். பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்க மத்திய பாஜக திட்டமிட்டுள்ளது. பொதுச்சொத்துக்களை பணமாக்கும் திட்டம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்று வருகிறது. 25 விமான நிலையங்கள், உணவு தானியாக் கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.