புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசுகளும் தருகின்றன எனக் காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு பாஜக பதிலளித்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனால் தினக்கூலிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல நாட்களாக வருமானம் ஏதும் இல்லாத காரணத்தால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். இதில் பலர் நடைப்பயணமாகவும், சைக்கிள்களிலும் பல நூறு கிலோமீட்டர்கள் பயணித்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணங்களால் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால் சில சிறப்பு ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயணச் செலவைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பாஜக அளித்துள்ள விளக்கத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசுகளும் தருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் 1,200 பேர் அதிகபட்சமாகப் பயணிக்கிறார்கள். அவர்கள் ரயில் நிலையத்துக்கு வந்தபின் மாநில அரசு அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிட்டால் டிக்கெட் தொழிலாளர்களிடமே வழங்கப்படும். ராகுல் காந்தி இதைக் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளிடம் தெரிவித்து பின்பற்றச் சொல்ல வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.