Skip to main content

பீகார் ரயில் விபத்து; நிவாரணம் அறிவிப்பு

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Bihar train incident Notice of relief

 

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே ஆனந்த் விஹார் என்ற இடத்தில் இருந்து காமாக்யா நோக்கிச் செல்லும் ரயில் (வண்டி எண் :12506) தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ரயிலின் 2 ஏசி பெட்டிகள் உட்பட 21 பெட்டிகள் நேற்று (11.10.2023) இரவு 09.35 மணியளவில் தடம் புரண்டன. இது  குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர், மருத்துவக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசாருடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

விபத்து நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது. மேலும் இந்த விபத்து குறித்த உதவிக்கு வடக்கு ரயில்வே சார்பில் 9771449971, 8905697493, 7759070004, 8306182542 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த விபத்து குறித்து உயர்மட்டக் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணிகள் சிறப்பு ரயில் மூலம் டானாபூர் சென்றடைந்தனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த பாதையில் இயக்கப்பட இருந்த 10 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் 21 ரயில்கள் வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ரயில் விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய்  இழப்பீடு வழங்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்