நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பகவந்த் மானை ஆட்சிமன்றக் குழு தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.
இதையடுத்து, நாளை (12/03/2022) சண்டிகரில் உள்ள ராஜ்பவனுக்கு கட்சியின் மூத்த தலைவர்களுடன் செல்லும் பகவந்த் மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதலமைச்சராக வரும் மார்ச் 16- ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார் பகவந்த் மான். பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் காலனியில் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான, ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, இன்று (11/03/2022) டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்துப் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழை பகவந்த் மான் வழங்கினார். அத்துடன் ஆசியும் பெற்றார். அதேபோல், கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.
பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, அமிர்தசரஸில் மார்ச் 13- ஆம் தேதி அன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெற்றிக் கொண்டாட்ட பேரணியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.