
மத்திய அரசு, இந்தியத் தலைநகர் டெல்லியில் 'சென்ட்ரல் விஸ்டா' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், புதிய பாராளுமன்றக் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது மத்திய செயலகங்கள், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் ஆகியவை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் பிரதமர் இல்லம் மற்றும் குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் கட்டுவதற்கான திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு அனுமதி வாங்கும் வகையில், மத்திய பொதுப் பணித்துறை, சுற்றுச்சூழல் துறையிடம் அளித்த ஆவணங்களின்படி, பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் உள்ளிட்டவற்றை கட்ட 13,450 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம், அடுத்தாண்டு மே மாதத்திற்குள்ளும், பிரதமருக்கான இல்லம் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளும் கட்டி முடிக்கப்படும் என அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கால், கட்டுமானப் பணிகள் பாதிக்காமல் இருக்க, மொத்த சென்ட்ரல் விஸ்டா திட்டமும் அத்தியாவசியப் பணிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. பிரதமர் இல்ல வளாகத்தில், பிரதமருக்கான சிறப்புப் பாதுகாப்பு படையினர் தங்குவதற்கான கட்டிடமும், இரண்டு பொதுச் செயலகங்களும் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா நெருக்கடிக்கு மத்தியில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை, ஆக்சிஜன் வாங்கவும், தடுப்பூசிக்கான பணிகளில் பயன்படுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்தநிலையில் கரோனா நெருக்கடியில் பிரதமர் இல்லம் கட்டப்படுவதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "நாட்டு மக்கள் ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், பிரதமருக்கு 13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதற்குப் பதிலாக, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வளங்களையும் அரசாங்கம் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இத்தகைய செலவுகளானது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் வேறு திசையில் உள்ளன என்ற செய்தியைத் தருகிறது" எனக் கூறியுள்ளார்.