கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், ஆலப்புழை, இடுக்கி உள்பட சில மாவட்டங்களில் வெள்ளம் புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்க கூட போக முடியாத அளவிற்கு அங்கங்கே ரோடுகள் அரிப்பு ஏற்படும் பாலங்கள் உடைந்தும் இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ வீரர்கள் உதவியுடன் உணவு பொருட்களும் கொடுத்து வருவதுடன் மட்டுமல்லாமல் அப்பகுதிகளில் வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் மக்களையும் படகு, கயிறுகள் மூலமும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் எதிர்கட்சியினரும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அதை தொடந்து இன்று கேரளா வந்த மந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளுடன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அதன் பின் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.