பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றதோடு, சிகிச்சை, ஆக்சிஜன் உள்ளிட்டவை கிடைக்காமல் இறந்தவர்களைவிட, நவீன மருத்துவ மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் என கூறினார். இது பெரும் சர்ச்சையானது. இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (indian medical association) ராம்தேவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும் ராம்தேவின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியது.
மேலும், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, நவீன மருத்தவ முறைகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ராம்தேவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நவீன மருத்துவ முறைகள் குறித்த உங்கள் கருத்து துரதிருஷ்டவசமானது என்றும் அதனை திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
மேலும் ஹர்ஷவர்தன் அந்தக் கடிதத்தில், "உங்களது பேச்சு, கரோனா வீரர்களை அவமதிக்கிறது, நாட்டின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. நவீன மருத்துவம் குறித்த உங்கள் பேச்சு சுகாதாரப் பணியாளர்களின் மன உறுதியை உடைத்து, கரோனாவிற்கெதிரான நமது போராட்டத்தைப் பலவீனப்படுத்தும்" என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதாகவும், இந்த சர்ச்சையை நினைத்து வருந்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தான் நவீன மருத்துவ அறிவியலையும் நவீன மருத்துவ முறைகளையும் எதிர்க்கவில்லை என்றும், அது மனித குலத்திற்கு பெரும் சேவையை ஆற்றியுள்ளது என கூறியுள்ள ராம்தேவ், சில அலோபதி மருத்துவர்கள் யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறைகளைப் போலி அறிவியல் என அழைத்து, தன்னை அவமதிக்கக்கூடாது என்றும், அதுவும் பல கோடி பேரின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.