மேற்குவங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ், தனது கிளைகளை பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறி வைத்து வருகிறது. இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸுக்குத் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளைச் செய்து வரும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் கோவாவில் மக்கள் மனநிலை குறித்த ஆய்வுகளை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் கோவாவிற்கு வருகை தந்த பிரசாந்த் கிஷோர், அங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது, பாஜகவிற்கு எதிராக இன்னும் பல தசாப்தங்களுக்கு போராட வேண்டியிருக்கும் எனவும், மோடியின் வலிமையை அறிந்துகொள்ளாதவரை வரை தோற்கடிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது;
வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இருந்ததைப் போலவே, இந்திய அரசியலின் மையப்புள்ளியாக பாஜக இருக்கப் போகிறது. பாஜக எங்கும் போய்விடாது. இந்திய அளவில் 30% வாக்குகளைப் பெற்றவுடன், நீங்கள் உடனே எங்கும் போய்விடமாட்டீர்கள். எனவே மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற வலையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஒருவேளை மக்கள் மோடியைத் தூக்கி எறிவார்கள். ஆனால் பாஜக எங்கும் போகாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு நீங்கள் அதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.
அங்குதான் ராகுல் காந்திக்குப் பிரச்சனை. மக்கள் அவரை (நரேந்திர மோடி) தூக்கி எறிவார்கள் என்று அவர் நினைக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. அவருடைய (மோடியின்) பலத்தை நீங்கள் ஆராய்ந்து, புரிந்துகொண்டு, அறிந்து கொள்ளாதவரை, அவரைத் தோற்கடிக்க உங்களால் ஒருபோதும் முடியாது. நான் பார்க்கும் பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலானோர் அவரது பலத்தைப் புரிந்துகொள்வதற்கும், அவரை எது பிரபலமாக்குகிறது என்பதை புரிந்துகொள்வதற்கும் போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. அதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அவரை எதிர்க்க முடியும்.
நீங்கள் எந்த காங்கிரஸ் தலைவரிடமோ அல்லது எந்தப் பிராந்தியத் தலைவரிடமோ சென்று பேசுங்கள். இது கொஞ்சக் காலம்தான். மக்கள் கோபமடைகிறார்கள். எதிர்ப்பு அலை ஏற்படும். மக்கள் அவரை தூக்கி எறிவார்கள் எனக் கூறுவார்கள். எனக்கு அதில் சந்தேகம் உள்ளது. நீங்கள் தேர்தல் மட்டத்தில் பார்த்தால், இது மூன்றில் ஒரு பங்கிற்கும் மூன்றில் இரண்டு பங்கிற்கும் இடையிலான சண்டை. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள் அல்லது பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்கள். பிரச்சனை என்னவென்றால், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் 10, 12 அல்லது 15 அரசியல் கட்சிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். காங்கிரசின் வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகும்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்....