மறைந்த காங்கிரஸ் தலைவரும் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் முதல்வராக இருந்த என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியின் கொலை வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான ரோகித் சேகர் திவாரி கடந்த 16 ஆம் தேதி அவருடைய வீட்டில் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரோகித் சேகர் திவாரி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ரோகித் சேகர் திவாரியின் மனைவி அபூர்வாவை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக டெல்லி குற்றவியல் துறை துணை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கொலையை அபூர்வாதான் செய்திருக்கிறார் என்பது சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரும் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை" என தெரிவித்துள்ளார்.