கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை நீக்க காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் பற்றிய பாடத்தை பள்ளிப் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கவும் கர்நாடக காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த கல்வி ரீதியிலான மாற்றங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும், இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் பாஜக கொண்டு வந்த நடைமுறைகளும் மாற்றப்படும் என்றும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில் கர்நாடக அரசு, பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய தலைவர்கள் பற்றிய பாடங்களை நீக்க முடிவு செய்துள்ளது. ஹெட்கேவர் பாடத்திற்கு பதிலாக சாவித்ரிபாய் பூலே குறித்த பாடம் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தையும் நீக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் இந்த தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை கட்டாயம் படிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.