நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த மாதம், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போது மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், “கூட்டணி கட்சி தலைவரான முகேஷ் இன்று மீன் கொண்டு வந்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருப்பதால் வெறும் 10 - 15 நிமிடங்கள்தான் இடைவேளை இருக்கும். அதற்குள் சாப்பிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நவராத்திரி நேரத்தில், தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவதாக பா.ஜ.க அவரை கடுமையாக விமர்சனம் செய்தது.
பா.ஜ.கவின் விமர்சனங்களுக்கு தேஜஸ்வி யாதவ் இன்று (10-04-24) தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பா.ஜ.கவில் உள்ளவர்கள் அறிவுத்திறனை சோதனை செய்வதற்காகவே இந்த வீடியோவை நாங்கள் பதிவு செய்தேன். அந்த வீடியோவை நான் பகிர்ந்திருந்தாலும், அது நவராத்திரிக்கு முந்தைய நாளான அன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பதை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதை கவனிக்காமல் எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. நாங்கள் நினைத்ததை சரி என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தேஜஸ்வி யாதவ்வை விமர்சிப்பதாக நினைத்து தனது சொந்த கட்சி வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை, பாலிவுட் நடிகையும், பா.ஜ.க வேட்பாளருமான கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். மொத்தம் 4 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஹிமாச்சலப் பிரதேசத்தில், ஒரே கட்டமாக ஜுன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் மாண்டி தொகுதியில், பாலிவுட் நடிகையும், பா.ஜ.க வேட்பாளருமான கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலை எதிர்கொள்ள கங்கனா ரனாவத் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், மாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கங்கனா ரனாவத் பேசியதாவது, “கெட்டுப்போன இளவரசர்களிடம் கட்சி இருக்கிறது. அது சந்திரனில் உருளைக்கிழங்கு வளர்க்க விரும்பும் ராகுல் காந்தியோ, அல்லது போக்கிரித்தனம் செய்து மீன் சாப்பிடும் தேஜஸ்வி சூர்யாவோ, இந்த நாட்டின் மொழி மற்றும் கலாச்சாரம் புரியாதவர்களால் எப்படி இந்த நாட்டை வழிநடத்த முடியும்” எனப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கங்கனா ரனாவத் பேசியதற்கு எதிர்வினையாற்றிய தேஜஸ்வி யாதவ், தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து, ‘யார் இந்தப் பெண்’ என்று பதிவிட்டிருந்தார். தேஜஸ்வி சூர்யா, கர்நாடாகா மாநிலம் பெங்களூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ये मोहतरमा कौन है? https://t.co/RvTfHjm26I— Tejashwi Yadav (@yadavtejashwi) May 4, 2024