இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். இந்தசூழலில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 2021 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி ஜனவரி 7, 8. 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தேர்வை நடத்தும் அலுவலர்களின் சுமுகமான பயணத்தை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.