
ஆந்திராவில் விஷவாயுக் கசிவுக்குக் காரணமான எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தை உடனடியாக மூட அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் 12 போ் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அம்மாநில நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், விசாரணை முடியும்வரை ஆலையைத் திறக்கவோ, ஆலைக்குள் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எதுவும் வேறு இடங்களுக்கு மாற்றவோ கூடாது என உத்தரவிட்டுள்ளனர். அதேபோல ஆலையின் இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும்வரை ஆலையின் இயக்குநர்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.