
தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இன்று மாலை டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதேநேரம் தற்பொழுது அதிமுகவில் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும், திரைமறைவில் இந்த சந்திப்பு நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவைக் நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து கோவை பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனிடம் செய்தியாளர்கள் 'எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம்' குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ''எதிர்க்கட்சித் தலைவர் டெல்லிக்கு போனார் என்றால் அங்கு யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பது கட்டாயம் உங்களுக்கு தெரிய வரும். அதை நீங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். இது தொடர்பாக நான் என்ன சொல்வது. அவர் சந்திக்கிறாரா? இல்லையா? என்பதெல்லாம் டெல்லியில் பார்த்ததுக்கு அப்புறம் தெரியும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'பாஜக-அதிமுக கூட்டணி அமைந்தால் நீங்கள் வரவேற்பீர்களா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ''பாஜகவின் நிலைப்பாடு என்பது கூட்டணி விவகாரங்களை பொறுத்தவரையில் மத்திய தலைமை ஏற்பாடு செய்வது. அவர்களுடைய முடிவை தமிழ்நாட்டில் உள்ள எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்'' என்றார்.