18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனி போன்று அதன் இரண்டாம் பதிப்பாக அமேசான் இந்தியாவில் கால் பதித்து இந்தியர்களின் தொழில்களை முடக்குகிறது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இதழான 'பாஞ்சஜன்யா' அண்மையில் விமர்சித்திருந்தது. இந்தியாவிற்குள் நுழைந்த போது கிழக்கிந்திய கம்பெனி என்னென்ன செய்ததோ அதே வேலையைத்தான் அமேசான் நிறுவனம் செய்கிறது என்ற குற்றச்சாட்டையும் அந்த இதழ் வைத்திருந்தது. இந்த கருத்து தொழில்துறை வட்டாரத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு அமேசான் நிறுவனம் தனது பதிலைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவியாபாரிகள் சுமார் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த அமேசான் தளம் அமைத்துக்கொடுத்துள்ளது. கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்த காலத்தில்கூட 75 ஆயிரம் சிறுவியாபாரிகள் கைகோர்த்து 450க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனை செய்து பயன்பெற்றனர் என விளக்கமளித்துள்ளது.