மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும், நஷ்டத்தில் இயங்கி வருவதால், இந்நிறுவனங்களை மீட்க மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக அதிக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறைக்கு சொந்தமான "ஏர் இந்தியா" நிறுவனத்தை, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்காக, மத்திய அரசு தனியார் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு விமான கண்காட்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் ஏர் இந்தியாவின் பங்குகளை முழுவதும் விற்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் ஏர் இந்தியா நிறுவனத்தை, தனியார் நிறுவனங்கள் வாங்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கவும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் குறைந்த கட்டணத்திலான விமான சேவையை வழங்கத் தொடங்கிய நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது சந்தையை இழக்க ஆரம்பித்தது.
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்தது. அந்நிறுவனத்துக்கு ரூ.56,000 கோடி கடன் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரூ.30,000 கோடியை நிதி உதவியாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கியதால் தான், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் பாதி பங்குகளை மட்டும் தனியாருக்கு விற்க அரசு முயற்சித்த நிலையில், பொருத்தமான முதலீட்டாளர்களை அரசால் ஈர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.