திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை லோக்மான்ய திலக் முனையத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் :12520) ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த ரயில் இன்று (17.10.2024) காலை அகர்தலாவிலிருந்து புறப்பட்டு லும்டிங் - பர்தார்பூர் மலை வழித்தடத்தின் வழியே அஸ்ஸாமின் லும்டிங் பிரிவின் கீழ் டிபலாங் நிலையத்தில் கடந்து செல்கையில் சுமார் மாலை 03 55 மணி அளவில் தடம் புரண்டது. இதில் ரயிலின் இன்ஜின் உள்ளிட்ட 8 பெட்டிகள் தடம் புரண்டன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்போ, ரயில் பயணிகளுக்கு எவ்விதமான பெரிய காயங்களோ எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட மூத்த அதிகாரிகளுடன் விபத்து நிவாரண ரயில் மற்றும் விபத்து நிவாரண மருத்துவ ரயில் ஏற்கனவே லும்டிங்கில் இருந்து சம்பவ இடத்திற்குப் புறப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக லும்டிங் - பதர்பூர் இடையே ஒற்றைப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் 03674 263120, 03674 263126 என்ற இந்த உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என வடகிழக்கு எல்லை ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “12520 அகர்தலா-எல்.டி.டி. எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று மாலை 03:55 மணிக்கு லும்டிங் அருகே உள்ள திபாலாங் நிலையத்தில் தடம் புரண்டன. இந்த விபத்தில் பயணிகளுக்குப் பெரிய உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். அஸ்ஸாமில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.