உலகம் முழுவதும் கரோனா வைரஸால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 82,000க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்து கட்சிகள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்த தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 14 பிறகும் ஊரடங்கு நீட்டிக்க மாநில அரசுகளும், வல்லுநர்களும் பரிந்துரைத்துள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்றுவதே அரசுக்கு முக்கியம் என கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். தற்போது உள்ள சூழல் சமூக நெருக்கடி நிலையை போல் உள்ளதால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
அனைத்து கட்சியின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் தங்களது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். ஊரடங்கு குறித்து விவாதித்தோம் என பிரதமர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 11ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக விவாதிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.