இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணித்து வருகிறது. புவியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் சென்றுகொண்டிருக்கிறது.
ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் திட்டத்தில் புவியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெற்றிகரமாக இஸ்ரோ வெளியே அனுப்பி இருந்தது. 2வது முறையாகப் புவியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணித்து ஆதித்யா விண்கலம் சாதனை படைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஜனவரி 4 ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.