அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் முதல் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மும்பை சென்றுள்ளளார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது சர்வதேச ஆங்கில நாளிதழில் வெளியான அதானி குழும முறைகேடுகளை குறிப்பிட்டு பேசுகையில், “சர்வதேச பத்திரிக்கைகள் இன்று முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருக்கின்றன. மோடியின் நண்பரான அதானி குழுமத்தின் ஊழல்கள் பற்றி சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி இந்தியாவுக்கு வரும் முதலீடுகளை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். அதானி விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்க அளிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதை அனுமதித்தது யார்.
அதானி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன். அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிக்காட்டியுள்ளது. அதானியால் இந்தியாவில் உள்ள எதையும் எளிதாக வாங்க முடியும். இது எப்படி சாத்தியம்?. அதானியின் பணம் யாருடையது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் அதானி முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்புவேன்” என கேள்விகளை எழுப்பினார்.